நமது உள்ளம்
கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடி மகிழக் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் உடுத்துவதற்குப் புதுத்துணிகள் எடுத்தாகி விட்டது. வீடுகளை அலங்கரிப்பதற்குச் சீரியல் பல்புகள் செயற்கையான வண்ணமலர்கள் இயற்கையான மலர்கள் என்றெல்லாம் ஏற்பாடாகி விட்டது. குடில், கிறிஸ்மஸ் மரங்கள் அமைப்பதற்கும் முடிவாகி விட்டது. . எல்லா வேலைகளையும் அட்டவணைப்படுத்தி யார் யார்க்கு என்ன பொறுப்பு எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் சொல்லியாகி விட்டது. இவ்வாறு கணக்கிடப்பட்ட எல்லாக் கொண்டாட்டங்களுமே வெளி அடையாளங்கள் தான். அந்த அடையாளங்கள் தான் பெரும்பாலான வீடுகளில் காணப்படுகிறது. இவை எல்லாம் அவசியம் தானா? என்று பட்டிமன்றம் வைப்போமென்றால் 'அவசியம்' தான் என்று அனைவரும் எந்தவிதத் தயக்கமுமின்றிச் சொல்வார்கள். காரணம் இப்பொதெல்லாம் நாம் வெளி ஆடம்பர வாழ்க்கையைத்தான் விரும்புகிறோம். மற்றவர்கள் நம்மைப் பெருமையாக நினைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
நமது தாய்த்திருச்சபை உங்களது கிறிஸ்துமஸ் விழா ஆடம்பரமான நிலையில் வெளியடையாளமாக இருக்க வேண்டாம். உள்ளார்ந்த உள்ளத்தளவில் உண்மையான முறையில் பிறக்கக் போகும் பாலன் இயேசுவை நம் ஒவ்வொருவரின் உள்ளமும் புனிதமாக வரவேற்க வேண்டும் எனக்கேட்டுகொள்கிறது. பாலன் இயேசுவின் பிறப்பு நம் உள்ளத்தில் இல்லாமல் வெறும் ஆடம்பராமாக இருந்தால் கிறிஸ்துவ வாழ்வில் கிறிஸ்து பிறப்பு நமக்கு என்ன பலன் அளிக்கும்? கிறிஸ்து பிறந்த நாளில் நம் மனநிலை உணர்வுகள் எவ்வாறு இருக்கின்றன?
“குழந்தை இயேசு பிறக்கச் சத்திரத்தில் அவர்களுக்கு இடம் இல்லாமல் போயிற்று” (லூக்கா 2:27) சத்திரத்தில் இடம் இல்லை என்றாலும் மாட்டுத்தொழுவத்தில் பிறந்து விட்டார். இயேசு பாலன் நம் உள்ளத்தில் பிறப்பதற்கு நம்மால் இடம் கொடுக்க முடியுமா? முடியும் என்று சொன்னாலும் இயேசு பாலன் பிறப்பதற்கு நம் உள்ளம் தகுதி வாய்ந்த இடமாக இருக்கின்றதா? இல்லையா?....
எல்லாமக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். (லூக்கா 2:10-11) நமக்காகப் பிறந்திருக்கும் இயேசு பாலனின் பிறப்பு நமக்கு மகிழ்ச்சியூட்டுவதாக இருக்கிறதா? இந்த மகிழ்ச்சியை அனுபவிக்கும் மனநிலையில் நாம் இருக்கின்றோமா? இல்லையா?....
குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள் (லூக்கா 2:12) நாம் நமது இயேசு பாலனை நம் இதயத்தில் கொண்டு நம் அன்பினாலும், நற்செயல்களினாலும் போர்த்திக் குளிர் இல்லாமல் வாடைக்காற்றுப் படமால் பத்திரமாக நம் உள்ளத்தில் வைத்துப் பாதுகாப்பதற்கான தூய உள்ளம் நம்மிடம் இருக்கிறதா? இல்லையா?....
விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக. உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உன்டாகுக! (லூக்கா 2:13-14) என்று கடவுளைப் புகழ்ந்துப் பாடிய வானதூதர்களைப் போன்று அமைதி நம்மிடம் உள்ளதா? எல்லாவற்றிற்கும் மேலான உலகமே கொடுக்க முடியாத யாராலும் பறித்துக் கொள்ள முடியாத இயேசு பாலன் பிறப்பை நம்மால் அமைதியாக, மனச்சமாதானத்துடன் சந்தோசமாகக் கொண்டாட முடிகிறதா? ஏன் முடியவில்லை?....
நமது மீட்புக்காகவே ஆண்டவர் இயேசு கிறிஸ்து மனிதராகப் பிறந்தார். மனிதனாகப் பிறந்த இயேசு பாலனை இந்தப் பிறந்தநாளில் மனமுவந்து, ஆர்வத்துடன் வரவேற்க வேண்டுமென்றால் முதலில் நமது இதயம் அவருக்குரியதாக இருக்க வேண்டும். உண்மையான மனதுடன் நல்லப்பாவசங்கீர்த்தனம் செய்து அதற்கான பரிகாரங்களையும் முடித்து எந்தப் பாவமும் இல்லாமல் தூயமையாக இருக்க வேண்டும். பிறந்த பாலனை புனிதமாக வரவேற்கும் மனதினை அப்போது அடைந்து விடுவோம்.